வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Wednesday, June 30, 2010

சிதறுண்ட காலக்கடிகாரம்




முக்காடு போட்ட வயோதிபன்
உன்னிடம் வருகையில்
உபயோகமற்ற பொருளின் ஞாபகம்
உனக்கு வரக்கூடும்
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல
மிக அவதானமாக அவனையும்,அவன் ஞாபகங்களையும்
உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்.

ஒளிமிகு உலகத்தை
உனக்கு பரிசளித்த அந்த வயோதிபன்
தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ்
முடங்கிப் படுக்கையில்
பல வர்ணங்களிலான இந்த உலகம்
மெல்ல, மெல்ல உருகிச் சிதைவதினை
நீ காணத் தலைப்படுவாய்

வாழ்வின் அர்த்தங்களை,
அர்த்தங்களின் வர்ணங்களை
குழைத்து தந்த வயோதிபனின்
காலக்கடிகாரம்
சிதறுண்டு கிடக்கும் மௌனவெளியில்
கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி
ஒரு மரங்கொத்தி சிறகசைக்க
எப்படி அனுமதிக்க முடிகிறது உன்னால்.

24.08.2007
தானா விஷ்ணு

1 comment:

  1. தாங்கள் எனது ஊரின் பாடசாலையில் கற்பிப்பதாக அறிந்தேன். சந்தோசம். உங்கள் இலக்கியப்பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
    இராமசாமி ரமேஷ்.
    அளம்பில்

    ReplyDelete