தூரிகையில் வளரும் மிருகம்
அன்றொருநாளும் இப்படித்தான்
காடுகளை வரைந்து கொண்டிருந்தாய்
உன் தூரிகையில் நிறைந்திருக்கும் கருமை
காடுகளில் இருளாய்ப் படிந்திருந்தது.
தீட்சண்யமான பார்வைக்கும்
குரூரமான விழிகளுக்கும்
வேறுபாடு அறியா மனம்
மிருகங்களையும் அதில் வரைந்து வைத்தது.
காடுகள் வளர மிருகங்களும் வளரத் தொடங்கின.
கதைகளில் படிந்த காடுகளையும்
அதில் அலையும் மிருகங்களையும்
அற்புதமாய் வரைந்ததாக நம்பத் தொடங்கிய நீ
காடுகள் உன்னைச் சூழ்ந்ததனை அறியாதிருந்தாய்
காடுகளும் மிருகங்களும்
தமக்குள் ஒரு கதையைப் புனையத் தொடங்கின
உனது சதையும் ரத்தமும் நிணமும்
அதில் கூடுதல் சுவையாய் இருந்தது.
உலக வரைபடங்களில்
காடுகளை மிருகங்களும் மிருகங்களைக் காடுகளும்
அறியவும் நேசிக்கவுமே மட்டும் முடியும்
கருத்துகள்
கருத்துரையிடுக