இருட்டு


 
இருட்டு



தானா விஷ்ணு

1
சரணடைவது பற்றிய எந்த எண்ணமும் அவனுக்கு இருக்கவில்லை. இன்றோடு தன்னுடைய வாழ்வு முடிந்து விடும் என்று நினைக்கும் போது இனந்தெரியாத மிருகமொன்று மூளையை தின்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். சித்தம் குழம்பிய வேட்டைநாய் செய்வதறியாது அங்கும் இங்கும் ஓடியலையும் மனநிலையே இப்போது அவனுக்கு இருந்தது. காலம் கடந்து விட்டது இனி வெல்வதற்கோ தப்பிப்பதற்கோ போர் செய்ய முடியாதென்பது அவனுக்குத் தெரியும். சண்டைக்குச் சலிக்காத தளபதிகளின் வீரத்தாலும் வீரர்களின் தியாகத்தாலும் வென்ற போர்க்களங்கள் ஏராளம். முப்பது வருடத்திற்கு மேலாக உலகின் எல்லாத் திசையிலும் தனது பேரும் பெருமையும் நிலைத்து நிற்பதற்கு அந்த வெற்றிகளே காரணம் என்பதனை மறந்தவன் இல்லை.
 
‘அந்தத் தளபதிகள் அந்த வீரர்கள் இப்போது எங்கே?’ 

இருள் சூழ்ந்த வெளியெங்கும் அலசிப் பார்க்கிறான். ஏமார்ந்து போகிற மனசை எது சொல்லியும் திருப்பதிப்படுத்த முடியவில்லை. 

அவனைச் சூழவும் காவலர்கள் நிற்கின்ற போதும் தனித்து விடப்பட்டதான படபடப்பு அடங்கவில்லை.. ‘இன்னும் எந்தனை மணிநேரங்கள்? எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன தன்னுடைய ஆன்மா கடைசிக் கணத்தினை அடைவதற்கு?.’ கண்களை மூடி கணக்குப் போட்டுப் பார்க்கின்றான். வேட்டுச் சத்தங்கள் மிக அருகில் வந்து விட்டன. ‘தன்னுடலில் கடைசி வல்லமை இருக்கும்வரை தூப்பாக்கியில் இறுதித் தோட்டா இருக்கும்வரை சரணவடைது என்ற வார்த்தைக்கே இடமில்லை’. திரும்பத்திரும்ப அவனது ஆழ் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. 

2
அவன் ஓர் இனத்தின் தலைவனாக தன்னை தகவமைத்துக் கொண்டவன். தன் இனத்தின் மீது வன்முறைகள் நிகழ்த்தப்பட்டபோது கொதித்தெழுந்த வீரர்களில் ஒருவன். வன்முறைகளாலும் கொலைகளாலும் கொள்ளைகளாலும் தமது இனம் தீராத் துயரத்தினை அனுபவிக்க நேர்ந்த பொழுது அதிகமான வீரர்கள் கொதித்தெழுந்தார்கள். ஒன்றாகி நின்று வன்முறையாளர்களின் முதுகுகளில் ஓங்கி அறைந்தார்கள். அவர்கள் செய்வதறியாது நிலைகுலையத் தொடங்கிய காலப்பொழுதொன்றில் வீரர்கள் தனித்தனி குழுக்களாய் தம்முள் பிரிந்து நின்று போராடத் துணிந்தார்கள். அத்தனைபேரும் தம் மக்களைக் காக்கவும் அவர்களின் கௌரவத்தை நிலைநிறுத்தவும் தங்களை தியாகிப் போம் என்ற திடசங்கற்பத்தோடு புறப்பட்டவர்கள். ஆனால் அத்தனை சுமை களையும் இப்போது அவன் மட்டுமே சுமந்து கொண்டிருந்தான். இது அவன் வலிந்து பெற்றுக் கொண்டதுதான் என்றாலும் கொள்கைப் பிடிப்போடு கடைசிவரை நின்று சமர் செய்யத் துணிந்தவனாகவும் வல்லமையுள்ளவ னாகவும் இருந்தவன் அவன்தான். 

3
காலம் எப்படி எப்படியோ போய் எப்படி எப்படியோ மாறி இப்போது அவனை காடு தூக்கியெறிய ஒரு பக்கம் நெடுங்கடலாலும் மறுபக்கம் சிறு கடலாலும் சூழப்பட்ட நிலத்தில் அவனைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. 

மிக நெருக்கமாகப் பின்னிக்கிடக்கும் இருள். அருகில் இருப்பவர்களைக் கூட அடையாளம் காட்டாது மறைத்து வைத்திருக்கிறது. அந்த இருளுக்குள் பொதிந்திருக்கும் அமைதியைக் கிழித்தபடி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. எதிரிகள் அண்மையிலா, தொலைவிலா நிற்கின்றார்கள் என்று ஊகித்துக் கொள்ள முடியாதபடி சத்தங்கள் அண்மையிலும் தொலை விலுமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. அத்தகைய வேட்டுக்களே தன்னுடைய முப்பதாயிரம் படைகளையும் அழித்தும் சிதறடித்தும்; இருக்கின்றன என்ப தனை அவன் நினைத்துப் பார்க்கிறான். எஞ்சியவர்கள் எங்கிருக்கிறார்கள்? எதிர்த்து நின்று சமராடுகிறார்களா? என்பதனை அவனால் திடமாக சொல்ல முடியவில்லை. இடைவிடாத எதிரிப்படையிகளின் வேட்டுச் சத்தங்களுக்கு நடுவில் தீர்க்கப்படும் ஒன்றிரண்டு வேட்டுக்கள் இன்னும் எதிர்த்து நிற்பதற்கு சிலர் இருக்கிறார்கள் என்பதனை அவனுக்குச் சொல்லியது. 

எல்லாம் இன்று இரவுடன் முடிந்துவிடும். மிகப்பெரிய இராட்சியம் துரும் பளவில் மாறும் என்று எப்போதுமே நினைத்துப் பார்த்தவனல்ல மிகச் சிறிய குழுவாக இருந்த தன்னுடைய படையை பேராட்சியத்தை ஆளக்கூடிய வலிமை கொண்ட அமைப்பாக மாற்றிய வல்லமையாளன் அவன். அதற்காக எத்தனை தியாகங்கள், கொலைகள், கபடத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது என்பது அவனுக்கு மட்டும்தான் வெளிச்சம்.
 
ஒருவனின் மரணபயம் பிறனை வீரனாக்கும் என்பது வரலாற்றுண்மை. அந்த வரலாற்றுண்மையை நன்றாக அறிந்த அவன் காலத்தைத் தனக்குச் சாதக மாக்கிக் கொண்டான். ஒன்றாகி நின்றவர்கள் இரண்டாகினார், நான்காகினர் பின் எட்டாகினர் இப்படியே ஆகி ஒவ்வொருவருக்குள்ளும் முரண்பட்டு ஒரு வரை ஒருவர் கொல்லவும் காணாமல் ஆக்கவும் தொடங்கினர். யார் சரி யார் பிழை என்று கணக்குப் போட முடியாத கால இடைவெளிக்குள் எதிர்த்து நிற்க முடியாதவர்கள் அழிந்து போயினர் அல்லது ஒளிந்து கொண்டனர். வல்லமை யுள்ளவனும் முந்திக்கொள்ளும் திறனுள்ளவனுமான அவன் எல்லோர் முதுகிலும் ஏறி தனது வெற்றியை நாட்டிக் கொண்டான். ஒடுக்கப்பட்ட இனத் தின் தனித்த காப்பாளனாகத் தன்னை பறைசாற்றிக் கொண்டான். முப்பது வருட முயற்சியில் எல்லோரும் தன்னை நம்பும் படியாக எல்லாவற்றையும் கட்டமைத்துக் கொண்டான். அவன் பெயர் தேசியத்தின் குறியீடாக மாறி யிருந்தது. சிலர் தெய்வத்துக்குச் சமமாக எண்ணவுமான பெயராகிப் போனது. வழிபடுவோர் வழிபடவும் துதிபாடுவோர் துதிபாடவும் கூடுமான காலத்தினை உருவாக்கிய பெருமிதம் அவனுக்கிருந்தது. அவன் பாட்டுடைத் தலை வனாகினான். 

4
போற்றுவோர் தூற்றப்படவும் தூற்றப்படுவோர் போற்றப்படுவதுமான காலச் சுழற்சிக்குள் இப்போது அவன் இருந்தான். மனம் வயதின் முதிர்ச்சியை உணர்வதில்லை. மனத்தினை முந்தும் அறிவுதான் முதிர்ச்சியையும் அதனால் ஏற்படும் அயற்சியையும் அறியும். அந்த முதிர்ச்சிக்கும் அயர்ச்சிக்கும் ஏற்ப செயலாற்றும் திறத்தினாலே மட்டும்தான் காலத்தையும் காலத்தில் கொள் ளும் காரியத்தையும் வெற்றி கொள்ளமுடியும். அவன் மனத்தின் வயப்பட்ட வனாகவே இருந்தான். போரை ஆரம்பித்த காலத்துக் கனவிலேயே உழன்று கொண்டிருந்தான். ‘போர் எப்போதும் ஒரு போக்கில் போவதில்லை, உலகின் போக்கில் அதன் மாற்றத்தில் போரியல் தன்மைகளும் உத்திகளும் மாற்ற மடையும்’ என்று தத்துவாசிரியர்கள் சொன்னதை அவன் சரியாகப் புரிந்து கொள்ளவுமில்லை. புரிந்து கொள்ளும் மனமும் அவனுக்கிருந்ததாகத் தெரிய வில்லை. தத்துவாசிரியர்களின் வெறுப்புக்கும் உள்ளாகிப்போனான். இத் தனை காலத்தில் தன்னுடைய வியூகத்திலும் துணிவிலும் எத்தனையோ போரை, எத்தனையோ படையை வெற்றி கொண்டவன் என்ற கர்வம் அவனி டம் எப்போதுமே இருந்தது. அந்தக் கர்வமே தன்னை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வரவும் அழிவு நிலைக்கு கொண்டு செல்லவும் காரணமாகியிருந்தது என்பதனை உணரும் நேரத்தில் அவன் இருள் சூழ்ந்த கடற்கரை வெளியில் தனித்துக்கிடந்த படகின் மீது அமர்ந்திருக்க வேண்டியவனாகக் காலம் மாற்றி யிருந்தது. சுய கௌரவம் அப்போதும் விடவில்லை இப்போதும் விடுவதா யில்லை. 

5
எது எப்படியோ நடந்து விட்டது இனி என்ன செய்வது என்ற கணக்கைத்தான் சமப்படுத்த எண்ணிக் கொண்டிருந்தான். எதிரிகளிடம் சரணடைவது இத்தனை காலத்து வெற்றியையும், தன் மீது எல்லோரும் கொண்டுள்ள நம்பிக் கையினையும் தன் கர்வத்தையும் துடைத்தழித்துவிடும் என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் மரணம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது.
 
எத்தனை வயதானாலும் மரணம் என்று நினைக்கும் போது சிறு அச்சம் தானும் காட்டாதவர்கள் யார் உள்ளனர்? எத்தனையோ வரலாற்று நாயகர்கள் நெஞ்சை நிமிர்த்தி மனத் தைரியத்துடன் மரணத்தை எதிர் கொண்டார்கள் என்று வரலாற்றில் படித்திருக்கிறோம், வரலாற்றில் புனைவுகள் அதிகரித் திருக்கும் காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறிதொரு கால வரலாற்றில் அவன் அஞ்சா நெஞ்சுடன் மரணத்தைத் தழுவிக் கொண்டான் என்று குறிக்கப்படும்போது பின்னவர்கள் அதனை நம்பத்தான் போகிறார்கள். வீரனாகச் சித்திரிக்கப்பட்ட ஒருவன் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும் போது அவனுள் தோன்றும் அச்சம் அவஸ்தை, வலி, வேதனை இவை எதுவும் வரலாற்றுப் பதிவுகளில் இருப்பதில்லை

6
அவனைச்; சுற்றி பாதுகாவலர்கள் எதற்கும் தயாராக நின்றார்கள். என்னதான் முயன்றாலும் தங்களையோ, அவனையோ காப்பாற்றிவிட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். மீள்வதற்கு வழியெதுவும் இல்லை என்றாகும்போது முடிவு தற்கொலையாகத்தான் இருந்தது. தன்னுடைய கடைசி உயிர் இருக்கும் வரை எதிரியைச் சுட்டு வீழ்த்துவதென்று சத்தியம் செய்த போர் வீரர்கள் தங்கள் உடம்புகளில் வெடிமருந்துகளைச் சுமந்து கொண்டு நின்றார்கள். பாதுகாவலர்களுக்கு அவனை நினைக்கும் போதும் அவனுக்கு பாதுகாவ லர்களை நினைக்கும் போதும் பரிதாபமாக இருந்தது. இத்தனை காலாப் போரில் கொடுத்த உயிர்விலையின் அர்த்தங்கள் சிதைந்து கொண்டி ருப்பதனை நினைத்து வேதனை கொள்வதனைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது அவனால். 

7
எதிரிப்படைகள் அண்மித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அல்லது சற்றுத் தாமதமாக அவர்கள் இந்த இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவனுடைய படைகளில் எத்தனை வீரர்கள் எஞ்சியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கவைத்து மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள் என்றும் இன்னும் சிலர் எதிரிப்படைகளிடம் மக்களோடு மக்களாக சரணடைந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவ னுக்கு அறியக் கிடைத்தது. மக்களை எதிரிப் படைகளிடம் சரணடைவதற்கு ஏற்றுக் கொள்ளாது அவர்களை அச்சுறுத்தியும் கொன்றும் காவலில் நின்ற வர்கள் இப்போது சரணடைகிறார்கள் என்று கேள்வியுறும் போது அவமானத்தால் மேலும் நிலைகுலைந்துபோனான். அவன் இருக்கும் மன நிலையில் எதுவும் செய்யவோ சொல்லவோ முடியவில்லை. வீரர்கள், கோழைகள் என்று வகைப்பிரித்துப் பார்க்கவும் முடியவில்லை. இறுகிப்போய் மௌனமாகவே இருந்தான். தான் நம்பிய தளபதிகள் தன்னைக் கைவிட் டார்களா? தன்னை நம்பிய தளபதிகளைத் தான் கைவிட்டேனா? என்பதைக் கூட ஊகிக்க முடியாத மனநிலையே இப்போது அவனுக்கு இருந்தது. 

8
வேட்டுச் சத்தங்கள் அருகாய் வந்து கொண்டிருக்க இன்னும் அவன் அமைதி குலைந்து கொண்டிருந்தான். மூலையில் ஞாபகங்கள் குளம்பத் தொடங்கின. மூலை சுருங்குவதும் விரிவதும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது எண்ணுக் கடங்காத நினைவுத் திசுக்கள் உள்ளுக்குள் சுழலத் தொடங்கின. உண்மையில் அவன் உறங்கி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. பெருநிலப்பரப்பின் முதல் நகரம் எதிரிப்படைகள்வசம் வீழ்ந்த பொழுது தொலையத் தொடங்கிய உறக்கம், தொடர்ந்து நகரங்களை எதிரிப்படைகள் கைப்பற்ற முற்றுமுழுதாக அவனிடமிருந்து விலகிக் கொண்டது. மூளை சீராக இயங்குவதற்குப் போது மான உறக்கம் அவசியம் என்பதும் அப்போதுதான் சீரான சிந்தனையுடன் திட்டங்களை வகுக்க முடியும் என்பதும் அவனுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் எப்படி உறங்க முடியும். தன் மரணம் மட்டுமல்ல மனைவி பிள்ளையின் மரணமும் தன்னை நம்பி வந்த மக்களின் மரணமும் கண்ணுக்கு முன் நிழலாய் ஆடும்போது எப்படி மூளை உறக்கத்தைத் தேடும். தன்னை நம்பி வந்த மனைவியின் நம்பிக்கையும் பாழ் மக்களின் நம்பிக்கையும் பாழ். 

9
தன்னுடைய தளபதிகளும் படை வீரர்களும் மீண்டும் இழந்த நகரை மீட்டு விடுவார்கள் என்று நம்பியிருந்ததில் எந்தப் பலனும் இல்லாமல் போய்விட்டது. எத்தனை வியூகங்கள் வகுக்கப்பட்டன. அனைத்தையும் தவிடுபொடியாக்கி எதிரிப்படைகள் முன்னேறிக் கொண்டதில் அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியாமல்தான் இருந்தது. போர்க்களத்தில் ஒரு துளி இரத்தத்தைப் பார்த்ததும் ஸ்தம்பிக்கும் இந்தப் படைகள் எப்படி வேகம் கொண்டு வருகின்றன என்ப தனைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. அகலக்காலை வைக்கட்டும் துவசம் செய்துவிடுகிறோம் என்று தளபதிகள் சொன்னதை நம்பி ஏமாந்து போனதை நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் தன்மீதே சினத்தையும் எரிச்சலையும் கொட்டிக் கொண்டான். ‘எத்தகைய குருட்டு நம்பிக்கையில் இருந்திருக் கிறேன். தன்னுடைய போரனுபவங்கள் இப்படி வீணாய்ப்போய்விட்டதே’ என்பதனை நினைக்கும் போது கூடுதல் வெறுப்பு தன்னைச் சுற்றிக் கொண்டி ருந்ததனை நினைத்து துயரப்பட்டான். 

இனி எதை நினைத்துத்தான் என்ன பயன். ஒவ்வொன்றையும் நினைக்கும் போதும் தலை கிறுகிறு என்று சுழல்வதுபோல் தோன்றியது. உறக்கமற்று இருப்பதால் இன்னும் மண்டைக்குள் குளவிகள் ஊர்வதுபோலவும் இரைவது போலவும் குறுகுறுப்பும் குடைச்சலும் அதிகமாகிக் கொண்டிருந்தன. கொஞ் சம் தூங்கி எழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அதற்கு அவகாசம் இருக்கவில்லை. இப்பவோ அப்பவோ எதிரிப் படைகள் முற்றுமுழுதாக தன்னைச் சூழ்ந்துவிடும் அபாயத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். அயற்சி, மூலைச்சோர்வு அவனது உடலையும் உளத்தையும் வாட்டிக் கொண்டி ருந்தன. அரை மயக்கத்தில் மிதப்பவன் போலவே அவன் இருந்தான். நிதானமாக இருக்கவோ நிதானமாக சிந்திக்கவோ கூடிய மனத்தை அவன் மெல்ல மெல்ல இழந்கொண்டிருந்தான் 

10
தன்னுடைய அதிகாரக் கனவு எத்தனை பேரைப் பலி எடுத்தது என்ற கணக்கு இப்போது அவனிடம் இல்லை. போர் என்பதே அதிகாரக் கனவில் தோன்று வதுதன். அந்த அதிகாரக் கனவுகளில் தோன்றும் போர் வன்முறைகளிலேயே வந்து முடிகிறது. விடுதலைக்கான போரில் பங்கெடுத்த வீரர்கள் இறுதியில் தங்களது இருப்பையும் அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் முயற்சியிலேயே முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் அதிகாரமும் ஒவ்வொரு வரை காவு வாங்குவதற்குத் தயாராகவே இருந்தது. எவன் முந்துகிறானோ அவனே வன்முறையின் வெற்றியாளனாகிறான். அத்தகைய வன்முறையின் வெற்றியாளன் இப்போது சித்தம் குளம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் போது பாவங்கள் தன்னைச் சூழ்ந்திருப்பதாக எண்ணும் நிலை இயல்பாகவே வந்து சேரும். பயம் நெருக்கமாகக் குடிகொள்ளும். பாவங்கள் திரட்சியாக கண்முன் வந்து ஆடும். இவை தவிர்க்க முடிவதில்லை.
 
அவனைச் சூழ்ந்துள்ள இடம் நிலையாக நிற்பதாக இல்லை. அவனைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. மரம், செடி, கொடி, தெரு, கடல். இப்படி எல்லமே அவனைச் சுற்றிக் கொண்டிருந்தன. அவனால் நிலையாக ஓர் இடத் தில் இருக்கவும் முடியவில்லை. எழுந்து இன்னொரு இடம் நகரவும் முடிய வில்லை. அத்தகைய மனநிலையில் தன் மனம் சிதைந்து கொண்டிருப்ப தாகவும் காற்றில் சாம்பலாகப் பறந்து கொண்டிருப்பதாகவும் உணர்ந்து கொண்டான். தன்னை நிதானப்படுத்த முடியாமல் தனக்குள் போராடிக் கொண்டிருந்தான். 

அவனுக்கு கண் மங்கிக் கொண்டிருந்தது. தன்னைச் சூழ சில உருவங்கள் வந்து மறைவது போல் தோன்றியது. அத்தனை முகங்களும் நன்கு பழக்கப் பட்டவையாக உணர்ந்தான். இடையிடையே வேட்டுச் சத்தங்கள் மிக அருகாக கேட்டுக் கொண்டும் இருந்தன. 

காவலன் ஒருவன் அருகில் வந்து கதில் ‘அக்கா பிழைச்சுப்போட்டா’ என்று சொன்னதும் ஓவென்று அழுவதா? மார்பில் அடித்துக் கத்துவதா? எதுவும் தோன்றவில்லை. போரியல் வரலாற்றில் எந்த இழப்புக்காகவும் வெளிப் படையாக அழுதவனில்லை அவன். தன் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிடு வதில் எப்போதும் விருப்பம் கொண்டவனில்லை. இப்போது மட்டும் எப்படி அழுவது? புரியவில்லை. அவன் அழவில்லை. 

மகன் களத்தில் மடியும் போது மனைவி அழுத அழுகை கண்ணுக்குள் நின்றாடி யது. காவலர்கள், தோழர்கள், போராளிகள் சூழ்ந்திருந்தார்கள்.; அவர்களின் கண்களிலும் கண்ணீர்த்துளி பனித்துக் கிடந்தது. ஆனால் தனது வீரத்தைக் குறைத்துவிட அவனுக்கு மனம் ஏகவில்லை. மகள் இறந்த போதும் அப்படித் தான் இருந்தான். இப்போது எல்லாவற்றுக்கும் சேர்த்து அழ வேண்டும் போல் தோன்றியது. எல்லாத் தாய்மைகளின் துயரத்தினையும் ஒன்று சேர்த்து அழு தால் இறுதி நேரத்தில் ஆன்மா சுத்தப்படும் போல தோன்றியது. சுயகௌரவம் இப்போதும் விடுவதாயில்லை. 

வந்தவனிடம் ‘உடல்’ என்று ஆரம்பிக்கவும், ‘எரித்து முடித்தாயிற்று’ சொல்லி காவலன் பின் நகர்ந்தான். அவனது மனதின் ஆழத்தில் கருங்கல்லொன்று நொருங்கிக் கொண்டிருந்தது. 

பாவங்கள் தன்னை சூழ்ந்து கொண்டிருப்பதாகக் கண்டான். தன் வார்த்தை களை வேதவாக்காகக் கொண்டு மாண்ட மாவீரர்கள் கல்லறைகளில் இருந்து எழுந்து வந்து புகையாய் தன்னைச் சூழ்வதாக பிரமை தோன்றவும் கொடுகிக் கொண்டான். அவர்களையும் நானேதான் கொன்றேன். என் நண்பர்களைக் கொன்றேன். நண்பர்களின் நண்பர்களைக் கொன்றேன் ;அவர்களின் நண்பர் களையும் கொன்றேன். தந்தையைக் கொன்றேன் அவனின் மகனைக் கொன்றேன். மகனின் மகனையும் கொன்றேன். புனிதம் என்ற ஒற்றை வார்த் தையில் இருந்து எத்தனை சாம்பல் மேடுகள், எத்தனை புதைகுழிகள். நினைக்க நினைக்க உடல் நடுங்கத் தொடங்கியது அவனுக்கு. அவர்கள் அனைவரின் ஆன்மாக்கள் தன்னை பழி தீர்ப்பதற்காகக் கிளம்பி வந்து விட்டாக எண்ணத் தோன்றியது. 

எல்லாம் முடிவுறும் தருணத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். தப்பித்த லுக்கான எந்த உபாயமும் அவனிடம் இல்லை. இனி தப்பித்துத்தான் என்ன பயன். பல்லாயிரம் படைவீரர்கள், இலட்சக்கணக்கான ஆயுதங்களால் தரமுடி யாத வெற்றியை நிராயுதபாணியாய் தன்னால் எப்படி பெற்றுக் கொள்ள முடியும். ஒரு கோழையாகி வாழ்வதனைவிடவும் செத்து வீரனாய் வாழ்வது சிறந்தது என்ற எண்ணம் மனதுக்குள் குறுகுறுத்துக் கிடந்தது.
 
தாயின் மடியில் படித்துறங்கினால் ஆசுவாசமாக இருக்கும் போல் தோன்றவும், கடுமிருள் சூழ்ந்த காட்டில், உறைந்து போகும் குளிரில் போர்சுமத்திவிடப்பட்ட பிள்ளைகளின் ஏக்கம், துயரம், மரண ஓலம் அவனுக்கு மிக நெருக்கமாக வந்தமர்ந்து உரசிக் கொண்டிருந்தது. குறுகிக் கொண்டான். மனம் சோர்வுடன் அடங்கிக் கொண்டிருப்பதை உணரத்தலைப்பட்டான். யேசுநாதரின் ஓரிரு வாசகங்களும் பரமாத்மாவின் கீதா உபதேசத்தின் ஓருசில வார்த்தைகளும் காதின் வழி நுழைவதுபோலிருக்க துப்பாக்கிச் சன்னமொன்று மூலையைக் குடைந்து ஊர்ந்து கடந்து செல்வதனை உணர்ந்தான். மிக நெருக்கமாக தன்னுடைய போர்வாளின் இரத்தப் பசிக்கு இரையாகிப் போன முன்னாள் நண்பர்களின் முகங்கள் தன்னைப் பார்த்துப் பரிகசிப்பதுபோலவும் பரிதாப மாய்ப் பார்ப்பதுபோலவும் தோன்றியது. காடும் வானமும் கடலும் மங்கிக் கொண்டிருந்தன. குருதி கன்னத்தின் வழியே சூடாக இறங்கிக் கொண்டிருந்து. தொலைவிலிருந்து இருள் எல்லாவற்றையும் விழுங்கியபடி அருகே வந்திறங்கியது. வேட்டோசையையும் பொருட்படுத்தாது குருதியை ருசித் துண்ண கரும்பூனையொன்று அருகில் அமர்ந்து சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது.

கருத்துகள்