வெளிவருகிறது ”தவிர” கலை இலக்கிய இதழ்- விரைவில் எதிர்பாருங்கள்

Thursday, July 1, 2010

ஓவியத்தின் கோடுகளில் நீளும் வாழ்ந்து போனவனின் குறிப்பு




வாழ்தல் மீதான வேணவாவினை
நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீதில் கவிகிறது
மீளவும் எனது சாபம்

தேவதைகாள்!
எனது இறுதிப் பிரார்த்தனைகளும்
அர்த்தமிழந்தன.

தூக்கிலிடப்பட்ட எனது இளமையை
குற்றுயிராகவேனும் காப்பாற்ற முடியா
விழிகள் இழந்த குரங்கென
தெங்கித் திரிகிறேன் பிரபஞ்சக் கிளைகளெங்கும்.

சுருக்கில் நசுங்கும் ஆயுள் கழுத்தில்
கயிறுவரைந்த கோடுகளை
யாவரும் அறிவதற்காய்
யாரேனும் பத்திரப் படுத்தட்டும்

தேவதைகாள்!
அர்த்தமிழந்துபோன உங்களுக்கான
துயர் மிகுந்த பிரார்த்தனைகளையும்
மீளத்தாரும்
வாழ்வினைத் தொலைத்தலையும்
பைத்தியக்காரனின் நாட்குறிப்புக்களில்
அவற்றினைச் சேமித்தல் வேண்டும்.

வரலாற்றிலிருந்து துடைத்தழிக்கப்படப் போகும்
எனது குறிப்புகளை
நான் வரையும்
சிக்கல் நிறைந்த ஓவியங்களிலிருந்து
யாவரும் வேறுபடுத்திக் கொள்ளட்டும்.

வாழ்வின் மீதான வேணவாவினை
நிர்க்கதிக்குள்ளாக்கும் போர் மீது கவிகிறது
மீள,மீள எனது சாபம்
ஒரு குடுகுடுப்பைக் காரனின் வார்த்தைகள் போல.

23-02-2007
தானா விஷ்ணு

Wednesday, June 30, 2010

சிதறுண்ட காலக்கடிகாரம்




முக்காடு போட்ட வயோதிபன்
உன்னிடம் வருகையில்
உபயோகமற்ற பொருளின் ஞாபகம்
உனக்கு வரக்கூடும்
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல
மிக அவதானமாக அவனையும்,அவன் ஞாபகங்களையும்
உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்.

ஒளிமிகு உலகத்தை
உனக்கு பரிசளித்த அந்த வயோதிபன்
தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ்
முடங்கிப் படுக்கையில்
பல வர்ணங்களிலான இந்த உலகம்
மெல்ல, மெல்ல உருகிச் சிதைவதினை
நீ காணத் தலைப்படுவாய்

வாழ்வின் அர்த்தங்களை,
அர்த்தங்களின் வர்ணங்களை
குழைத்து தந்த வயோதிபனின்
காலக்கடிகாரம்
சிதறுண்டு கிடக்கும் மௌனவெளியில்
கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி
ஒரு மரங்கொத்தி சிறகசைக்க
எப்படி அனுமதிக்க முடிகிறது உன்னால்.

24.08.2007
தானா விஷ்ணு

Monday, June 28, 2010

நடுநிசிப் பொம்மைகள்




நடு நிசிகளில்
பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன
அவைகளின் விழிகளுள் படர்கிறது
உதிர்ந்துகிடக்கும் மிரட்டும் விழிகள்

பொம்மைகள் சிரித்துப் பேசும்
மனநிலையில் இருப்பதில்லை
மிரட்டும் விழிகள்
ஆணியடிக்கிறது அதன் அடி மனதில்

எப்போதும் அறையின்
ஏதாவதொரு மூலையில்
மௌனமாய் முகத்தில் சோகம் நிரம்பி
அம்மனமாக சிலவேளை உறங்குகின்றன
அல்லது விழித்திருக்கின்றன.


பொம்மைகள் விழித்திருக்கும் போதும்
அல்லது உறங்கும் போதும்
அதன் விழிகள் கொடூரமான மிருகமொன்றினதோ
அல்லது
கொடூரமான பறவையொன்றினதாகவோ
அல்லது
கொடூரமான மனிதனுடையதாகவோ
தன் அடையாளம் காட்டுகிறது.

அறையின் மத்தியில்
உதிர்ந்துகிடக்கும் விழிகள்
நினைவில் வரும்போதெல்லாம்
பொம்மைகள்
தமது முகங்களை கண்ணாடியில் பார்ப்பதற்கு
அச்சப்படுகின்றன அல்லது வெறுக்கின்றன.

23-05-2006
தானா விஷ்ணு

Sunday, June 27, 2010

நிழற்படங்கள்


வெளவால்களும் சிலந்திகளுமாய்
கூடிவாழும் வீடொன்றில்
தொங்கியபடி இனம் தெரியாதொருவனின்
நிழற்படம்
முன்பெப்போதுமே கண்டிராத அந்த முகம்
நன்கு பழகியவனைப் போல்
புன்னகைக்கிறது.

எல்லோரும் விட்டுக்கிளம்பிய பின்
தனித்திருப்பது கூடத்தெரியாமல்
புன்னகைக்கும் அந்த உருவம்
என்னுடையதாய் மாறுகின்றது.
நான் திகைத்துத் திரும்புகையில்
சுவர் எங்கும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன
என்னையொத்த நிழற்படங்கள் இன்னும் பல.

15.12.2008
தானா விஷ்ணு

Tuesday, February 16, 2010

மனதைத் திண்ற பூதம்


நொருங்கிய கண்ணாடியின் விம்பங்களில்
தலை சீவுகிறது காலம்

காலபூதம் உனக்குமெனக்குமிடையில்
எழுப்பிய சுவரில் முட்டிமோதுகிறது தும்பி

பனிப்பெய்யும் இரவில் கூதல் காயும் பூனையென
குறிகிப்போகிறது
உன் நினைவுகளுடன் உயிர்

கனவுகள் உதிர்ந்துகிடக்கும் இரவில்
மின்மினிப் பூச்சியின் ஒலிபோல்
ஒட்டிக் கொள்கிறது
உன் மெல்லிய பிரியம்.

நிலவற்ற ஒவ்வொரு இரவும்
அமைதியெனும் பூதம் கொத்திச் செல்கிறது மனது

சீழ்வடிய, சீழ்வடிய
துடைத்தெறியும் காகிதமாச்சு
மனதுள் ஆடும் நினைவுச்சு சுமை.

காற்றில் விளக்கணைய, விளக்கனைய
ஒலியூட்டும் முயற்சியெ
தொடர்கிறது எனக்குள்ளான புன்னகை.

கைதவறிய பிரம்பை
தேடியலையும் குருட்டுக்கிழவனைப் போல்
மனம் நாடியலைகிறது வாழ்வை.

28.08.2006
தானா விஷ்ணு

Sunday, January 24, 2010

பூனைகளின் விழிகள் அல்லது பறவைகளின் உதிர்ந்த இறகுகள்

தானா விஷ்ணு

நித்தியமான மௌனத்தில்
அச்சம் நிரம்பும் இரவில்
விழித்திருக்கும் பூனை விழிகளுள்
அலைந்து கொண்டிருக்கிறது
பறவைகளின் உதிர்ந்த இறகுகளின் உஷ்ணம்.

யாருடைய குரல்களுக்கும்
பதில் தராத இரவு
பூனையின் விழிகளிலிருந்து
தப்பிக்கும் எலிகளின் பிரேரனை மனது.
புறவையின் உதிர்ந்து இறககளை சப்பியபடி
அந்நியமாகிறயது
இரவுகளில் தெரு.

பறவைகள் கொல்லப்படும்
இரவுகளில்
ஆந்தத் தெருக்களில்
பூனைகள் புணர்ந்து கொண்டிருக்கின்றன
காற்றில் படபடக்கின்றன
பறவைகளின் உதிர்ந்த இறகுகள்.

11-04-2006
தானா விஷ்ணு

Saturday, November 14, 2009

பரிவு


தானா. விஷ்ணு
..............................................
என்னை மன்னிக்க நேரிடும்
கணங்களில்
ஒரு தாயின் பரிவுக்கு சென்றுவிடுகிறாய்.

எம் குழந்தையின் தலையினைக்
கோதிய படி
உன் பார்வைகளால்
எல்லாவற்றினையும் துடைத்தெறிந்துவிடுகிறாய்

எல்லாவற்றினையுமென்றால்
என் தவறுகளை,
என் மீதான கோபங்களை,
இன்னமும் இருக்கக் கூடிய ஏதேனும் எல்லாவற்றையும்

24.05.2006